மக்களவை தேர்தலில் போட்டியில்லை.. ஆனாலும் எம்பியாகிறார் கமல்ஹாசன்.. எப்படி?
- IndiaGlitz, [Saturday,March 09 2024]
வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றும் அக்கட்சிக்கு திமுக கூட்டணியில் இருந்து ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இது குறித்து பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது மக்களவை தேர்தலில் போட்டியில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் திமுக கூட்டணிக்கு தனது கட்சியின் முழு ஆதரவளிக்கும் என்றும் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் ராஜ்யசபா தேர்தலின் போது திமுக கூட்டணியில் இருந்து ஒரு தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்றும் ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகிய இருவரும் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் கூறி இருப்பதாவது: திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முக ஸ்டாலின் அவர்களும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களும் கலந்து பேசியதில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வது எனவும் வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத கமல்ஹாசன் அடுத்த ஆண்டு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் எம்பி ஆகப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.