முதல்முறையாக தேர்தலில் போட்டி: வேட்புமனு தாக்கல் செய்தார் கமல்ஹாசன்!

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த 2017ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார் என்பது தெரிந்ததே. அதன்பின் கடந்த 2019ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கமல்ஹாசன் கட்சி, தற்போது சட்டமன்ற தேர்தலிலும் தனி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அவரது கூட்டணியில் சரத்குமார் கட்சி மற்றும் பாரிவேந்தர் கட்சி இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து இன்று அவர் கோவை தெற்கு தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

முதன்முதலாக அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடும் கமல்ஹாசனை கோவை தெற்கு தொகுதி மக்கள் வெற்றி பெறச் செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி ஸ்ரீநிவாசன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.