குற்றவாளிகள் நாடாளக்கூடாது! டுவிட்டரில் பொங்கிய கமல்
- IndiaGlitz, [Monday,November 20 2017]
உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக டுவிட்டரில் மட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகளிலும், பொதுமக்கள் முன்னிலையிலும் சமூக விழிப்புணர்வுகளுக்கான புரட்சிகரமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவருடைய கருத்துக்கள் ஆளும் அரசியல்வாதிகளுக்கு சிம்மசொப்பனாகவும், தமிழக மக்களுக்கு ஒரு நல்ல தலைவர் தோன்றிவிட்டதையும் காட்டுகிறது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் தனது டுவிட்டரில் ஆவேசமாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். “ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின்,அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய்' என்று கூறியுள்ளார்
இந்த டுவிட் புரட்சிகரமாக இருந்தாலும் வழக்கம் போல் இந்த கருத்தும் பலருக்கும் புரியாமல் உள்ளது. ஒரு அரசாங்கமே திருடுவது என்பது மாநில அரசை குறிக்கின்றதா? மத்திய அரசை குறிக்கின்றதா? குற்றவாளிகள் என்று கமல் யாரை குறிப்பிட்டு சொல்கிறார், போன்ற சந்தேகங்கள் அரசியல் விமர்சகர்களுக்கே எழுந்துள்ளது. இதனை அவர் தெளிவுபடுத்துவார் என்று நம்புவோம்