ராகுல் காந்தியை சந்திக்கும் கமல்ஹாசன்.. முக்கிய முடிவு எடுத்திருப்பதாக தகவல்!
- IndiaGlitz, [Sunday,December 18 2022]
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை உலக நாயகன் கமல்ஹாசன் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கன்னியாகுமரியிலிருந்து இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கினார் என்பதும் தற்போது அந்த பயணம் 100 நாட்களை தாண்டி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் முன்னாள் ரிசர்வ் வங்கியின் தலைவர் ரகுராம் ராஜன் உள்பட பல பிரபலங்கள் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் உலக நாயகன் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் வரும் 24-ஆம் தேதி டெல்லியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் எனது பயணத்தை புரிந்து கொண்டாலே கூட்டணி தொடர்பாக நான் எந்த திசையில் செல்கிறேன் என்பது புரியும் என்றும் தமிழ்நாடு முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன என்றும் பூத் கமிட்டி தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் இந்த முடிவிலிருந்து வரும் 2024 தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.