மீண்டும் இணையும் மணிரத்னம்-கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Wednesday,January 20 2016]

சமீபத்தில் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்ததை அடுத்து தற்போது பெங்களூர் மற்றும் மைசூர் நகரங்களில் 8வது பெங்களூரு சர்வதேசத் திரைப்பட விழா வரும் 28ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்குமாறு பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருவரும் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த விழா குறித்த ஆலோசனை கூட்டம் ஒன்று இன்று பெங்களூரில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது. பிரபல பாலிவுட் நடிகை ஜெயாபச்சன் இந்த திரைப்பட விழாவை வரும் 28-ஆம் தேதி தொடக்கி வைக்கிறார்.

ஜனவரி 29-ஆம் தேதி முதல் பெங்களூரில் உள்ள பிவிஆர் சினிமாஸ், மைசூரில் ஐனாக்ஸ் சினிமாஸ் போன்ற திரையரங்குகளில் 50 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 172 திரைப்படங்கள் திரையிடப்படும். சிறந்த ஆசிய, இந்திய, கன்னடப் படங்களுக்கான போட்டியும் நடத்தப்படும்.

உலகின் தலைசிறந்த பட இயக்குநர்களான இஸ்ட்வான் ஸ்ஜாபோ (ஹங்கேரி), ஜாபர் பனாஹி (ஈரான்), ஜியா ஜாங்க் கே (சீனா), ஹெள ஹ்சியான் (ஜப்பான்), ஆல்பர் (துருக்கி), ஜாக்கியூஸ் ஆடியார்ட் (பிரான்ஸ்), கிறிஸ்டியன் பெட்ஜோல்ட் (ஜெர்மனி), நன்னி மொரேட்டி (இத்தாலி), ஆகியோர்களின் இயக்கத்தில் உருவான திரைப்படங்களும், ஆவணப்படங்களும் திரையிடப்படவுள்ளன. இந்த விழா வரும் பிப்ரவரி 5ஆம் தேதி மைசூரு அரண்மனை முகப்பில் நிறைவு விழா நடைபெறும்.