கோவை தெற்கு கமல்ஹாசன் முன்னிலை: வானதிக்கு 3வது இடம்

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் தற்போது முன்னிலை விவரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சற்று முன் வெளியான தகவலின்படி திமுக கூட்டணி 68 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 45 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு தொகுதியிலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது.

நட்சத்திர தொகுதி என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் முன்னிலை வகித்து வருகிறார். அவரை அடுத்து காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார் இரண்டாம் இடத்தில் உள்ளார். கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெறுவார் என்று அனைவரும் கூறிய பாஜகவின் வேட்பாளர் வானதி சீனிவாசன் தற்போதைய நிலையில் மூன்றாவது இடத்தில் தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த முடிவுகள் ஆரம்பக்கட்ட நிலை தான் என்பதும் போகப்போகத்தான் வெற்றி உறுதி செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் முதல் முறையாக தேர்தலை சந்திக்கும் கமல்ஹாசன் முன்னிலை வகிப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.