'பொன்னியின் செல்வன்' படத்தில் கமல்ஹாசனும் இருக்கின்றாரா? ஆச்சரிய தகவல்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று வெளியான டீசர் இந்த படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில் இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என பல திரையுலக பிரபலங்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் இந்திய திரை உலகில் உள்ள முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யாராய், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஒவ்வொரு கேரக்டருக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து மணிரத்னம் படமாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனும் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது. அவர் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் உள்ள முக்கிய கேரக்டருக்கு குரல் கொடுத்துள்ளார் என்றும், அவர் யாருக்கு குரல் கொடுத்துள்ளார் என்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கமல்ஹாசன் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை தயாரிக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முயற்சி செய்தார் என்பதும் ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை என்ற நிலையில் தற்போதுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் அவர் இணைந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு ஒரு இனிமையான செய்தியாகவே பார்க்கப்படுகிறது.