ரஜினிக்கு கமல் திடீர் அழைப்பு: இணைந்து செயல்பட வாய்ப்பா?
- IndiaGlitz, [Tuesday,May 15 2018]
காவிரி மேலாண்மை குறித்த வழக்கில் நேற்று மத்திய அரசு காவிரி வரைவு செயல்திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. இதன்பின்னர் இந்த வழக்கு மே 16ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் காவிரி விவகாரத்தில் நாம் உரிமைகளை இழந்து வருகிறோம் என்றும், அரசியல் கட்சிகளை தாண்டி தமிழர்கள் என்ற உணர்வில் அனைவரும் ஒன்றிணைந்து காவிரிக்காக போராட வேண்டும் என்றும் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் மே 19ஆம் தேதி இதுகுறித்து ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்ட கமல்ஹாசன், இந்த கூட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை அவர் நேற்று நேரில் சென்று இதுகுறித்து ஆலோசித்தார். இந்த நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கும் தொலைபேசியில் அழைப்பு விடுத்ததாகவும், இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் தனது முடிவை அவர் கூறுவார் என்றும் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார்.
காவிரி விவகாரம் உள்பட சமூக பிரச்சனைகளுக்கு கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் இணைந்து குரல் கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்