'PS 2' படத்தில் கமல்ஹாசன்.. என்ன அழகாக கதைச்சுருக்கத்தை சொல்லியுள்ளார்.. வைரல் வீடியோ..
- IndiaGlitz, [Saturday,April 22 2023]
மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் நாடு முழுவதும் படக்குழுவினர் பயணம் செய்து புரமோஷன் செய்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தின் அறிமுக உரையை கமல்ஹாசன் ஆற்றி இருந்தார் என்பதும் பொன்னியின் செல்வன் கதைச்சுருக்கத்தை அவர் மிக அழகாக விளக்கி இருந்தார் என்பதையும் முதல் பாகம் பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
இந்த நிலையில் முதல் பாகம் போலவே இரண்டாவது பாகத்திலும் கமல்ஹாசன் கதை சுருக்கத்தை மிக அழகாக சொல்லி இருக்கும் வீடியோவை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கமல்ஹாசன் அதில் கூறியிருப்பதாவது:
ஆண்டு 968, சோழர்களின் பூமி உக்கிரமான ஒரு போரை எதிர்நோக்கி இருந்தது. ராஷ்டிர குல மன்னன் படை வந்து கொண்டிருந்த நிலையில், வீரபாண்டியன் சாவுக்கு பழிதீர்க்க பாண்டிய நாட்டினர் சோழ நாட்டிற்கு ஊடுருவி இருந்தனர். சுந்தர சோழன் பெரிய தந்தை கண்டராதித்தன் மகன் மதுராந்தகன் தந்தையின் விருப்பத்தையும் தாயின் ஆணையையும் மீறி மணி முடிக்கு ஆசைப்பட்டு சதிகாரர்களுடன் கைகோர்த்தார். சோழ நாட்டின் நிதி அமைச்சர், பெரிய பழுவேட்டரையர், மதுராந்தகருக்கு துணையாக இருந்தனர்.
பெரிய பழுவேட்டரையர் மனைவி நந்தினி பாண்டியர்களுடன் சேர்ந்து சோழ நாட்டுக்கு எதிராக சதியில் இறங்கினார். இளவரசன் அருள்மொழிவர்மனை இலங்கையில் சிறைப்பிடித்து வர அரசரை கொண்டு ஆணை பிறப்பித்தார். ஆனால் அருள்மொழி சென்ற படகு கடலில் மூழ்கியது. அருள்மொழிவர்மன் இறந்ததாக பரவிய செய்தியால் நாடு கொந்தளித்தது.
பொன்னியின் செல்வன் கடலில் மூழ்கியதற்கு நந்தினியின் சதியே காரணம் என்று ஆதித்த கரிகாலன் வெறி கொண்டு தன் படையுடன் தஞ்சை நோக்கி விரைந்தார்’ என்று கமல்ஹாசன் ’பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கு அறிமுக உரையில் கூறியுள்ளார் என்பதும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.