களத்தில் இறங்கினார் கமல்ஹாசன்
- IndiaGlitz, [Saturday,October 28 2017]
உலக நாயகன் கமல்ஹாசன் மீது ஒருசில அரசியல்வாதிகள் கூறும் குற்றச்சாட்டு அவர் டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்கிறார் என்பதுதான். இந்த விமர்சனத்தை தகர்க்கும் வகையில் இன்று நேரடியாக மக்களிடையே களத்தில் இறங்கிவிட்டார் கமல்ஹாசன்.
நேற்று தனது டுவிட்டரில் வடசென்னைக்கு மழை காலத்தில் ஏற்படும் ஆபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய கமல், தனது டுவிட்டுக்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக விரைவில் மக்களை சந்திக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். அந்த வகையில் சற்றுமுன்னர் எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் ஆகிய பகுதிகளுக்கு சென்று அந்த பகுதியில் உள்ள நிலைமைகளை கண்டறிந்தார்.
கமல்ஹாசனின் வருகை குறித்த தகவல் தெரிந்தவுடன் அந்த பகுதி மக்கள் அவரிடம் தங்கள் குறைகளை கூறினர். குறிப்பாக மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் முனையங்களை நடு ஆற்றில் கட்டியுள்ளது குறித்தும், சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கூறினர். அவைகளை உன்னிப்பாக கேட்டுக்கொண்ட கமல், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து இதுகுறித்து பேசுவதாக மக்களிடம் உறுதி அளித்துள்ளார்.
கமல் களத்தில் நேரடியாக இறங்கிவிட்டதால் இனி அரசியல் களமும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.