கமல்ஹாசனின் 'ஹே ராம்', 'ஆளவந்தான்' பட நடிகர் மறைவு: திரையுலகினர் இரங்கல்!

  • IndiaGlitz, [Saturday,November 26 2022]

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ‘ஹே ராம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் இயக்குனர் விக்ரம் கோகலே இன்று காலமானார். அவருக்கு வயது 77.

பழம்பெரும் பாலிவுட் நடிகர் விக்ரம் கோகலே நவம்பர் 5ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருடைய இதயம், சிறுநீரகம் மற்றும் ஒரு சில உறுப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக செயலிழந்த நிலையில் அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்ட தாகவும் இதனையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி காலமானார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விக்ரம் கோகலே இந்தி தெலுங்கு மராத்தி மற்றும் என்று பல மொழிகளில் நடித்தவர் என்பதும் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘ஹே ராம்’ மற்றும் ‘ஆளவந்தான்’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய விருது பெற்ற நடிகர் விக்ரம் கோகலேவின் மறைவு திரையுலகிற்கு பெரும் இழப்பு என திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் விக்ரம் கோகலே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே உயிரிழந்ததாக வதந்தி பரவிய நிலையில் அவருடைய மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.