ஹார்வர்ட் பல்கலை தமிழ் இருக்கைக்காக கமல்ஹாசன் செய்த நிதியுதவி
- IndiaGlitz, [Thursday,November 16 2017]
உலகில் உள்ள ஏழு செம்மொழிகளில் தமிழுக்கு மட்டுமே ஹார்வர்ட் பல்கலையில் இருக்கை இல்லை என்ற நிலையில் தற்போது இந்த இருக்கையை பெற உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் நிதியுதவி செய்து வருகின்றனர்.
கோலிவுட் திரையுலகை பொருத்தவரையில் ஜி.வி.பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மான், விஷால் ஆகியோர் இந்த தமிழ் இருக்கைக்காக நிதியுதவி செய்துள்ள நிலையில் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்
இதுகுறித்து பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்கள் கூறியபோது, ஹார்வர்ட்' பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை நிதிநல்கைக்காக ஓராண்டுக்கு முன் திரு கமல்ஹாசன் அவர்கள் உலகத்தமிழர் அனைவரும் நிதி நல்குமாறு குரல் கொடுத்தார். இன்று குரல் கொடுத்தால் மட்டும் போதாது. பொருள் கொடுக்க வேண்டும் எனக் கூறி ரூபாய் இருபது லட்சத்தை நிதிநல்கையாக வழங்கியிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. ஊர் கூடித் தேர் இழுப்போம். தமிழிருக்கைக்குப் பொருள் கொடுப்போம்' என்பது அவர் கருத்து' எனக் கூறினார்.
இந்நிகழ்வில் லண்டனைச் சேர்ந்த முனைவர் ஆறுமுகம் முருகையா, அமெரிக்காவைச் சேர்ந்த கால்டுவெல் வேல்நம்பி, எழுத்தாளர் சுகா போன்றோர் உடனிருந்தனர்.