சக்கர நாற்காலி விவகாரம்: கமல்ஹாசன் அளித்த விளக்கம்!  

  • IndiaGlitz, [Saturday,February 27 2021]

உலக நாயகன் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் அவர்கள் சமீபத்தில் தனது கட்சியின் 4வது ஆண்டு தொடக்கவிழா நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்வேன் என்றும் ஆனால் அதே நேரத்தில் சக்கர நாற்காலியில் உட்காரும் நிலை வரும் வரை அரசியலில் இருக்க மாட்டேன் என்றும் கூறினார்.

கமலஹாசனின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுக தொண்டர்கள் பலரும் கருணாநிதி குறித்து தான் கமல்ஹாசன் சக்கர நாற்காலி குறித்து பேசியதாக கூறி சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர். இது குறித்த ஹாஷ்டாக் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல் ஹாசன் இது குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது: சக்கர நாற்காலியில் கலைஞர் அமர்ந்திருந்த போது அதனை பிடித்து தள்ளிக்கொண்டு வந்த கூட்டத்தில் நானும் ஒருவன். வயோதிகத்தையும் சக்கர நாற்காலியையும் கேலி செய்யும் விதமாக நான் பேசும் வாய்ப்பே கிடையாது. கலைஞர் மீது எனக்கு மரியாதை உண்டு. அவர் தற்போது உயிரோடு இருந்தால் நான் பேசியதை புரிந்து கொண்டு இருப்பார் என்று தெரிவித்தார். கமலஹாசனின் இந்த விளக்கத்தை அடுத்து திமுக தொண்டர்கள் தற்போது சமாதானமாகி இருப்பார்கள் என்று கருதப்படுகிறது.