'உத்தம வில்லன்' தோல்வி.. 8 ஆண்டுகளுக்கு பின் கமல் எடுத்த அதிரடி முடிவு!
- IndiaGlitz, [Wednesday,January 04 2023]
கமல்ஹாசன் நடிப்பில் லிங்குசாமி தயாரிப்பில் உருவான ’உத்தமவில்லன்’ என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனை அடுத்து 8 ஆண்டுகளுக்கு பிறகு ’உத்தம வில்லன்’ தோல்வி குறித்து கமல்ஹாசன் அதிரடி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன், கே பாலச்சந்தர், கே விஸ்வநாத், ஜெயராம், ஊர்வசி, ஆண்ட்ரியா, பூஜா குமா,ர் பார்வதி, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ’உத்தம வில்லன்’. கமல் ஹாசனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் ’உத்தமவில்லன்’ ரிலீஸ் ஆகி எட்டு ஆண்டுகள் கழித்து இந்த படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு ஒரு திரைப்படம் நடித்துக் கொடுக்க கமல் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த தகவலை லிங்குசாமி சமீபத்தில் அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார்.
உத்தம வில்லன் திரைப்படம் மிகவும் கடின உழைப்புடன் வித்தியாசமாக எடுக்கப்பட்ட திரைப்படம் என்றும் ஆனால் இந்த படம் மக்களை சென்று சேரவில்லை என்றும் தெரிவித்தார். முதலில் ’பாபநாசம்’ படத்தின் ரீமேக்கை தான் நாங்கள் தயாரிப்பதாக இருந்தது என்றும் ஆனால் கமல்ஹாசன் கூறியதை அடுத்து ’உத்தமவில்லன்’ படத்தை தயாரித்தோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் கமல்ஹாசனை லிங்குசாமி சந்தித்ததாகவும் அப்போது ’உத்தம வில்லன்’ படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட ஒரு திரைப்படம் நடித்து கொடுப்பதாக கமல்ஹாசன் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து விரைவில் கமல்ஹாசன் நடிப்பில் லிங்குசாமி தயாரிப்பில் உருவாகயிருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.