40 ஆண்டுகால நண்பருக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்!

  • IndiaGlitz, [Monday,November 04 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாதுறையில் சிறப்பாக சேவை ஆற்றியதற்காக மத்திய அரசு அவருக்கு ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ என்கிற பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்குவதாக நேற்று முன் தினம் அறிவித்துள்ளது. கோவாவில் வரும் 20-ந்தேதி முதல் 28-ந் தேதி வரையில் நடைபெறும் சர்வதேச திரைப் பட விழாவில் ரஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இந்த விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து மத்திய அரசுக்கும், தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும் நன்றி கூறி ரஜினிகாந்த் டுவிட்டரில் தனித்தனியாக இரண்டு டுவீட்டுக்களை பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’விருது பெற்ற ரஜினிக்கு கோலிவுட் திரையுலகினர் மட்டுமின்றி இந்திய திரையுலக பிரபலங்களும், தமிழக அரசியல்வாதிகளும் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் உலக நாயகனும், ரஜினியின் 40 ஆண்டுகால நண்பருமான கமல்ஹாசன் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.