தமிழக அரசுக்கு கமல்ஹாசன் பாராட்டு
- IndiaGlitz, [Friday,November 16 2018]
கடந்த சில மாதங்களாக தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கஜா புயல் விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை பாராட்டியுள்ளார்.
இன்று காலை கரையை கடந்த கஜா புயலை தமிழக அரசும், அரசு அதிகாரிகளும் எதிர்கொண்ட விதம் அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்றது. குறிப்பாக அமைச்சர்கள் இரவு முழுவதும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து செயல்பட்ட விதமும், இரண்டு நாட்களாக வீட்டிற்கு கூட செல்லாமல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணிபுரிந்த விதத்தை அனைவரும் பாராட்டினர்.
அந்த வகையில் தமிழக அரசின் இந்த நடவடிக்கையை கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பாராட்டியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: இதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, தற்பொழுது கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது.
அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், ஊடகங்கள் தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி அடையாளத்தைத் தவிர்த்து, பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் சேவை செய்துகொண்டிருக்கும் மய்யம் களவீரர்கள் தொடர்ந்து தொண்டாற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.