எனது கோரிக்கையை ஏற்ற முதல்வருக்கு பாராட்டுக்கள்: கமல்ஹாசன்

எனது கோரிக்கையை ஏற்ற முதல்வருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கமல்ஹாசன் ட்விட்டரில் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் டெல்லி உள்பட பல மாநிலங்களில் இந்த நிதியுதவியை செய்யப்பட்டு வருவதாகவும் தமிழக அரசும் அதனை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி உதவி செய்வது குறித்து இன்று முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் கொரோனாவால் பெற்றோர்களை இழந்து ஆதரவற்று தவிக்கும் குழந்தைகளுக்கு தலா ரூபாய் 5 லட்சம் வைப்புநிதி செய்யவும், அந்த குழந்தை 18 வயது நிறைவடையும் வரை அந்த தொகை தொகையின் வட்டியை குழந்தைக்கு வழங்கிடவும், 18 வயது முடிந்த பின்னரும் குழந்தைகளுக்கு சேரவும் உத்தரவிட்டார். மேலும் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் பட்டப்படிப்பு வரை கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் ஆகியவைகளை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி கொரோனாவால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு குழந்தைகளோடு இருக்கும் தாய் அல்லது தந்தைக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

முதல்வரின் இந்த உத்தரவை அடுத்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்து கூறியதாவது: கடந்த 20-ஆம் தேதி பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளைக் காக்க ‘கண்மணிகளைக் காப்போம்’ என தமிழக முதல்வருக்கு அறிக்கை மூலமாகக் கோரிக்கை வைத்திருந்தேன். இக்குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்புநிதி மற்றும் படிப்புச் செலவுகளை அரசே ஏற்கும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்.