கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதி: சுஹாசினி தகவல்..!
- IndiaGlitz, [Saturday,November 02 2024]
உலகநாயகன் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து சாருஹாசன் மகள் சுஹாசினி தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
இயக்குனர் மகேந்திரன் இயக்கிய 'உதிரிப்பூக்கள்' என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி, அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் சாருஹாசன் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ள சாருஹாசனுக்கு தற்போது 93 வயதாகும் நிலையில், அவர் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சாருஹாசன் மகள் சுஹாசினி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ’தீபாவளிக்கு முந்தைய இரவு, அப்பா சாருஹாசனுக்கு உடல்நிலை குறித்த பிரச்சினை ஏற்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். தற்போது அவர் நலமுடன் உள்ளார், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்’ என்று கூறியுள்ளார்.
இதனை அடுத்து, ரசிகர்கள் சாருஹாசன் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.