ரஜினி-கமல் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி குறித்த முக்கிய தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் வரும் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படுவதை அடுத்தும், திரையுலகில் கமல்ஹாசன் 60 ஆண்டுகள் பணிபுரிந்ததை அடுத்தும் நவம்பர் 7 முதல் 9 வரை மூன்று நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
ஏறத்தாழ 106 வருடங்களைத் தொட்டுத் தொடரும் இந்தியத் திரையுலகத்தின் நீண்ட நெடும் பயணத்தில், கமல்ஹாசன் எனும் ஒற்றை மனிதனின் வாழ்வும் அர்ப்பணிப்பும் 60 வருடங்களாக இருப்பது பெரும் பங்களிப்பாகும். தனது 65 வயதில் 60 வருடங்கள் ஒரு நடிகராக, ஈடு இணையற்ற தனித்தன்மையுடன், எவ்விதத்திலும் சமரசம் செய்திடாத பல வெற்றிகளை பெற்று, பல்துறை வித்தகராக திரையுலகிலும் சமூக வாழ்விலும் விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றார் பத்மபூஷன் திரு. கமல் ஹாசன்.
திரைத்துறையின் பல்வேறு துறைகளில் அடியெடுத்து வைக்க விரும்பும் சமகால கலைஞர்களுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் “தரம்” என்பதற்கான ஒரு தங்கத் திறனளவாக திரு.கமல்ஹாசன் அவர்கள் உயர்ந்து நிற்கிறார். கலையின் மீது பேரார்வமும் பெருங்காதலும் கொண்ட ஒரு தனி மனிதன், எவ்வாறு போற்றுதலுக்குறிய நாயகனாக உருவெடுக்கிறான் என்பதற்கு திரு.கமல் ஹாசன் அவர்களே பெரும்
உதாரணம்.
காலத்தால் அழிக்க முடியா பல அரிய படைப்புகளையும், திரை உருவாக்கத்தில் புதிய யுக்திகளையும், தொழில்நுட்பங்களையும் உட்புகுத்தி உலக திரைப்படங்களுக்கு, நிகராக இந்திய திரைப்படங்களை தரம் உயர்த்துவதை ஒரு தவமாகவே செய்து வருகிறார் திரு.கமல்ஹாசன்.
திரு.கமல் ஹாசன் அவர்களின் இந்த ஈடு இணையற்ற பயணத்தினைக் கொண்டாடும் விதமாக, நவம்பர் 7, 8, 9 ஆகிய தேதிகளில் ஒரு தொடர் கொண்டாட்டமாக ராஜ்கமல் ஃப்லிம்ஸ் இண்டதேஷனல் நிறுவனம் அறிவிக்கின்றது.
7 நவம்பர் 2019: திரு. கமல் ஹாசன் அவர்களின் பிறந்த தினமே அவாது தந்தையாரும் சுதந்திர போராட்ட வீரரும், வழக்கறிஞருமான அய்யா திரு. டி சீனிவாசன் அவர்களின் நினைவு தினமுமாகும். எனவே அன்றைய தினம் திரு.கமல் ஹாசன் அவர்கள், தனது தந்தையாரின் திருவுருவச்சிலையினை தமது சொந்த ஊரான பரமக்குடியில் தமது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் காலை 10.30 மணி அளவில் திறக்கவுள்ளார். இந்நிகழ்வு மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள், திரு.கமல்ஹாசன் அவர்களின் அன்பிற்குரிய கட்சி , உறுப்பினர்கள், நற்பணி இயக்கத்தார் மற்றும் ஊடகங்கள் முன்னிலையில் நடைபெறும்.
8 நவம்பர் 2019: தனது திரையுலக குருவான திரு.பாலச்சந்தர் அவர்களின் திருவுருவச் சிலையினை, ராஜ்கமல் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் காலை 9.30 மணி அளவில் திறக்கவுள்ளார். இந்திகழ்வில் திரு.பாலச்சந்தர் அவர்களின் குடும்பத்தாரும், திரையுலகத்தினைச் சார்ந்த முக்கிய பிரமுகர்களும், ஊடக நண்பர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
காந்தியாரின் 150வது ஆண்டு விழாவினைக் கொண்டாடும் விதமாக திரு.கமல்ஹாசன் அவர்களின் இயக்கத்தில் வெளியான “ஹே ராம்” திரைப்படத்தின் சிறப்பு காட்சி, சென்னை சத்யம் திரையரங்கில் மதியம் 3.30 மணியளவில் திரையிடப்படவுள்ளது. இந்நிகழ்வின் பொழுது வருகை தரும் திரையுலக பிரமுகர்கள் மற்றும் ஊடகத்தினருடன் இத்திரைப்படம் குறித்து திரு, கமல்ஹாசன் அவர்கள் கலந்துரையாடல் நடத்தவிருக்கிறார்.
9 நவம்பர், 2019: கலையுலக நாயகன் திரு.கமல் ஹாசன் அவர்களின் 60 ஆண்டு கலைப்பயணத்தினை கொண்டாடும் வகையில் இசைஞானி இளையராஜா அவர்களின் மிகப்பிரமாண்டமான இசை நிகழ்ச்சி
நடைபெறவுள்ளது. ஏறத்தாழ 44 ஆண்டு காலம் திரு.கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து பயணித்த அவரது நண்பர் திரு. ரஜினிகாந்த் அவர்களும், பல்வேறு திரைப் பிரபலங்கள் மற்றும் தட்சத்திரங்களும் கலந்து
கொண்டு சிறப்பிக்கும் இந்த இசைவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளது.
மேற்சொன்ன அனைத்து நிகழ்ச்சிகளும் கமல்ஹாசன் என்கின்ற மாமனிதனை நேசத்துடனும், நம்பிக்கையுடனும் கொண்டாடும் தமிழக மக்களின் உணர்வுப்பூர்வமான, உயிர்ப்புள்ள ஒரு நிகழ்வாக அமையும் என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமம் விஜய் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments