தனது படத்தில் நடிக்குமாறு கெஞ்சிய கமல்ஹாசன்: முடியாது என மறுத்த நடிகர்!

தனது படத்தில் நடிக்குமாறு உலக நாயகன் கமல்ஹாசன் கெஞ்சியதாகவும், ஆனால் அந்த நடிகர் நடிக்க முடியாது என மறுத்து விட்டதாகவும் சமீபத்தில் ’விக்ரம்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது கமல்ஹாசன் கூறியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 1992ஆம் ஆண்டு கமல்ஹாசன், சிவாஜி கணேசன், ரேவதி, கௌதமி உள்பட பலரது நடிப்பில் உருவான ’தேவர் மகன்’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் இந்தி ரீமேக் 1997ஆம் ஆண்டு தயாரானது. அப்போது இந்த படத்தில் சிவாஜிகணேசன் கேரக்டரில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமாரிடம் கமல்ஹாசன் ஆலோசனை செய்தார்.

கமல்ஹாசன் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டு கொண்டபோதிலும், தற்போது தான் நடிப்பதில்லை என்றும் தனது முடிவை மாற்ற முடியாது என்றும் திலீப்குமார் கூறியதாக கமல்ஹாசன் தெரிவித்தார். இதனை அடுத்து வேறு வழியின்றி அந்த கேரக்டரில் அம்ப்ரிஷ்புரி நடித்தார் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

கமல்ஹாசன் படத்தில் நடிக்க முடியாது என பழம்பெரும் நடிகர் திலீப் குமார் கூறிய தகவல் தற்போது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.