ஒரே ஒரு பிரமாண்ட வெற்றி: ரஜினியை பின்னுக்கு தள்ளிவிட்டாரா கமல்?

  • IndiaGlitz, [Sunday,July 10 2022]

அண்டை மாநிலங்களில் ’ஆர்.ஆர்.ஆர்’, ‘கேஜிஎப் 2’ ஆகிய திரைப்படங்கள் வசூலில் பெரும் சாதனை செய்துவரும் நிலையில் தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த், அஜீத், விஜய் ஆகிய மாஸ் வசூல் நடிகர்கள் இருந்தும் மிகப்பெரிய சாதனை செய்யும் படம் வரவில்லை என்ற ஏக்கம் தமிழ் ரசிகர்கள் இருந்தது.

ஆனால் அந்த ஏக்கத்தை போக்கியது கமல்ஹாசன் ’விக்ரம்’. ’விக்ரம்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி ரூ.400 கோடிக்கும் அதிகமாக திரையரங்குகளில் வசூல் செய்துள்ளது என்பதும் அதுமட்டுமின்றி டிஜிட்டல் உரிமை, தொலைக்காட்சி உரிமை, ஆடியோ உரிமை ஆகியவை எல்லாம் சேர்த்தால் இந்த படத்தின் மொத்த வசூல் இமாலய அளவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாபெரும் வெற்றியால் கமல்ஹாசனின் சம்பளம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு பின் நான்கு ஆண்டுகளாக கமல்ஹாசன் படம் வெளியாகாத நிலையில் தற்போது வந்துள்ள ’விக்ரம்’ அவரது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் இது உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

’விக்ரம்’ திரைப்படம் கமல்ஹாசனின் சொந்தப்படம் என்பதால் அவரது சம்பளம் கணக்கிடப்படவில்லை. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தின் வசூலில் அவருடைய சம்பளத்தின் ஷேரை கணக்கிட்டால் சுமார் 130 கோடி வரும் என்று கோலிவுட் திரையுலகினர் கூறுகின்றனர். அந்த வகையில் பார்த்தால் ரூ.100 கோடி சம்பளம் வாங்கும் ரஜினி, விஜய், அஜித்தை விட கூடுதல் சம்பளம் வாங்கும் நடிகராக கமல்ஹாசன் உயர்ந்துள்ளதாக தெரிகிறது.

தற்போது ’இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தில் கமிட் ஆகும் போது அவரது சம்பள உயர்வு எவ்வளவு என்பது தெரிய வரும்.

’விக்ரம்’ என்ற ஒரே ஒரு படத்தின் வெற்றியின் காரணமாக ரஜினி, விஜய், அஜித்தை கமல் பின்னுக்கு தள்ளி விட்டதாக கோலிவுட் திரையுலகினர் கூறி வரும் நிலையில் ’விக்ரம்’ பட வசூலை ரஜினியின் ‘ஜெயிலர்’, விஜய்யின் ‘வாரிசு’ மற்றும் அஜித்தின் ‘ஏகே 61’ மிஞ்சுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.