கேரள அரசின் துணிச்சலான நடவடிக்கைக்கு கமல் பாராட்டு
- IndiaGlitz, [Wednesday,November 15 2017]
பிறப்பு சான்றிதழில் சாதி பெயரை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று சமீபத்தில் கேரள அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்து அதனை சுற்றறிக்கையாக வெளியிட்டிருந்தது. இந்த நடவடிக்கைக்கு கேரள மக்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சி தலைவர்களும், தமிழக அரசியல் தலைவர்களும் பாராட்டு தெரிவித்திருந்தனர்
இந்த நிலையில் கேரள முதல்வருக்கு நெருக்கமானவராக இருந்து வரும் கமல்ஹாசன் இந்த நடவடிக்கைக்கு தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் 'மீண்டும் கேரள அரசின் துணிச்சலான நடவடிக்கை. உங்கள் சுற்றறிக்கை வரலாற்றுப்பூர்வமானது. நான் என் மகள்களைப் பள்ளியில் சேர்க்கும்போது பிறப்புச் சான்றிதழில் சாதி, மதத்தைக் குறிப்பிட மறுத்துவிட்டேன். என் மகள்கள் 21 வயதைக் கடந்த பிறகு ஸ்ருதி ஹாசன் இந்து மதத்தைத் தேர்வு செய்தார். அக்ஷரா ஹாசன் சாதி, மதம் இல்லாமல் வாழ முடிவெடுக்கலாம்'' என்று பதிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் கமல்ஹாசன் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் செய்ததை கேரள அரசு தற்போது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கையை தமிழக அரசு எப்போது செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்