அந்த மனம் தான் கடவுள்: ஆம்புலன்ஸ் டிரைவர் பாண்டித்துரைக்கு கமல் பாராட்டு

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் பாண்டித்துரை என்பவர் சென்னையில் கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் டிரைவர் வேலை பார்த்து வருகிறார் என்பதும், இந்த வேலை வேண்டாம் என அவரது பெற்றோர்கள் வலியுறுத்தியும் அவர் இந்த வேலையை விட முடியாது என்று கூறி பெற்றோர்களை சமாதானம் செய்த ஆடியோ வைரல் ஆகி வருவது குறித்தும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் பாண்டித்துரையின் கடமை உணர்வை பாராட்டி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

108 ஓட்டுநர் பாண்டித்துரை நீங்கள் என் நம்பிக்கையின் நாயகன். இவர் போன்ற தன்னலம் பாராது நாட்டிற்காக முன்னிற்கும் வீரர்கள் தான் நம் தேசத்தை இயக்குபவர்கள். பாசத்தில் கதறும் அவரின் பெற்றோரின் குரல், உள்ளத்தை உலுக்கும் போதும் நாடு என்னவாகும்? என்று கேட்கும் அந்த மனம் தான் கடவுள்.

கமல்ஹாசனின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருவதோடு, கமல்ஹாசனை அடுத்து பலர் பாண்டித்துரைக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.