முன்ஜாமீனா? கைதா? கமல் மனுமீது திங்களன்று தீர்ப்பு
- IndiaGlitz, [Saturday,May 18 2019]
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர்தான் நாதுராம் கோட்சே என்றும் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கமல்ஹாசன் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில் அவர் மீது இரண்டு பிரிவுகளில் அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி கமல்ஹாசன் தரப்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவின் இருதரப்பு விசாரணையும் முடிந்துவிட்ட நிலையில் இந்த மனுவின் தீர்ப்பை வரும் திங்கட்கிழமை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் கமலுக்கு முன்ஜாமீன் கிடைத்துவிட்டால் பிரச்சனை இல்லை. இல்லையே அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
நாளை தமிழகத்தில் நான்கு தொகுதிகளின் சட்டமன்ற இடைத்தேர்தலும் வரும் 23ஆம் தேதி வியாழன் அன்று தேர்தல் முடிவும் வெளிவரவுள்ள நிலையில் 20ஆம் தேதி முன்ஜாமீன் மனுமீது என்ன தீர்ப்பு வரும் என்பதை அறிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் பரபரப்புடன் காத்திருக்கின்றனர்.