பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. கமல்ஹாசன், சரத்குமார் கண்டனம்..!

  • IndiaGlitz, [Saturday,July 06 2024]

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த படுகொலைக்கு தமிழக அரசியல்வாதிகள் மற்றும் திரையுலகினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இன்று காலை திரை உலகில் முதல் நபராக நடிகர், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து தற்போது உலகநாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் பாஜக பிரமுகர் சரத்குமார் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதை தற்போது பார்ப்போம்.

கமல்ஹாசன்:

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவரது மறைவு பட்டியலின மக்களுக்கு பேரிழப்பாகும்.

ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப்படையினரால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சரத்குமார்:

சென்னை பெரம்பூரில் வசிக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு.ஆம்ஸ்ட்ராங் தனது குடியிருப்புக்கு அருகே சிலருடன் பேசிக் கொண்டிருக்கையில், இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட மர்ம நபர்கள், அவரை அரிவாளால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், மாலை 07.30 மணியளவில் பொதுவெளியில், தேசிய இயக்கத்தின், மாநில தலைவர் பொறுப்பில் உள்ளவர்க்கு ஏற்பட்ட இந்த நிலை மக்களை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும்.

சமூகத்தில் கொலை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது சட்டம், ஒழுங்கை சீர்குலைப்பதற்கு சமம். காவல்துறை கொலையாளிகளை கண்டறிந்து, உரிய நடவடிக்கை வேண்டும். கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடனடியாக மேற்கொள்ள அவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.