தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம்: கமல்ஹாசன், ரஜினிகாந்த் கருத்து
- IndiaGlitz, [Tuesday,May 22 2018]
தூத்துகுடியில் இன்று நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையில் முடிந்தது. தூத்துகுடி கலெக்டர் அலுவலகத்திற்குள் 144 தடையை மீறி உள்ளே நுழைய முயன்ற போராட்டக்காரர்களை நோக்கி தடியடி, கண்ணீர்ப்புகையை போலீசார் நடத்தினர். இருப்பினும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 9 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மீதும், தமிழக அரசு மீதும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில் விரைவில் அரசியல் களத்தில் குதிக்கவுள்ள ரஜினிகாந்த், இந்த சம்பவம் குறித்து தனது கருத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு' என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே கமல்ஹாசன் கூறியபோது, 'ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நீதி கேட்டு மக்கள் அமைதியாக போராடிய பொழுதெல்லாம் அலட்சியப்படுத்தியது அரசுகள். அரசின் அலட்சியமே அனைத்துத் தவறுகளுக்கும் காரணம். இதில் குடிமக்கள் குற்றவாளிகள் இல்லை. அவர்கள் எப்பொழுதும் உயிர் இழக்கிறார்கள். முன்பு ஆலையினால் இப்பொழுது அரசின் ஆணையினால். அனைவரும் அமைதி காக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.