கமல்ஹாசனுக்கு பாடம் சொல்லி கொடுத்த பிரபலம்.. 'இந்தியன் 2' படத்தின் சூப்பர் அப்டேட்!

  • IndiaGlitz, [Thursday,September 29 2022]

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. திருப்பதியில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கமலஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும், 1920ஆம் ஆண்டில் நடைபெறும் பிளாஷ்பேக் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் ஆகிய இருவருமே வர்மக்கலையை பயன்படுத்தும் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசன் மற்றும் காஜல்அகர்வால் ஆகிய இருவருக்கும் வர்மக்கலை பயிற்சி கொடுக்க பிரகாசம் குருக்கள் என்பவர் ’இந்தியன் 2’ படத்தில் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே ’இந்தியன்’ படத்தின் முதல் பாகத்தில் சேனாதிபதி கேரக்டரில் நடித்திருந்த கமல்ஹாசன் வர்மக்கலையை பயன்படுத்தி இருப்பார் என்பது தெரிந்ததே. அதன் தொடர்ச்சியாக இந்தியன் 2’ படத்திலும் வர்மக்கலை பயன்படுத்தப்படுகிறது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்தி சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். லைகா, ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படம் அடுத்தாண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.