ஒரே நாளில் மோதும் கமல் - அஜித் படங்கள்? த்ரிஷா ரசிகர்களுக்கு டபுள் சந்தோஷம்..!

  • IndiaGlitz, [Tuesday,September 10 2024]

அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் கமல்ஹாசன் மற்றும் அஜித் படங்கள் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது இரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் தொடங்கி விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித் நடித்த ’விடாமுயற்சி’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று கூறப்பட்டாலும் அந்த படம் தீபாவளி அன்று வெளியாக வாய்ப்பில்லை என்றும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் தான் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் கோடை விடுமுறைக்கு தள்ளி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’தக்லைஃப்’ மற்றும் ’விடாமுயற்சி’ ஆகிய இரண்டு படங்களும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் இதில் ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. அது என்னவென்றால் இரண்டு படங்களிலும் த்ரிஷா தான் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு தீபாவளி அன்று அஜித் நடித்த ’வேதாளம்’ மற்றும் கமல்ஹாசன் நடித்த ’தூங்காவனம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியான நிலையில் 10 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரே நாளில் இரு பெரிய நடிகர்களின் படங்களும் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.