என்னுடைய படத்தின் ரீமேக்கில் நீங்கள் நடிக்க வேண்டாம்.. சிம்புவுக்கு கமல் கூறிய அறிவுரை!

என்னுடைய படத்தின் ரீமேக்கிலோ அல்லது நான் நடித்த படத்தின் இரண்டாம் பாகத்திலோ நீங்கள் நடிக்க வேண்டாம் என கமல் அறிவுரை கூறியுள்ளார்.

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’.

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடந்த நிலையில் இந்த விழாவில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது சிம்பு மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் உரையாடிய நிகழ்வு ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருந்தது.

இந்த உரையாடலின் போது ’உங்களுடைய எந்த படத்தை நான் ரீமேக் செய்ய வேண்டும்? அல்லது எந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நான் நடிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? என கமலிடம் சிம்பு கேள்வி கேட்டார்.

அதற்கு பதில் கூறிய கமல்ஹாசன், ‘என்னுடைய படங்களின் ரீமேக் அல்லது இரண்டாம் பாகத்தில் எல்லாம் நீங்கள் நடிக்க வேண்டாம். என்னுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும்’ என்று பதிலளித்தார். அவருடைய பதிலால் சிம்பு ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர். இந்த உரையாடலை அடுத்து விரைவில் கமல்ஹாசனுடன் சிம்பு நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.