மகாத்மா காந்தி குறித்து கமல்ஹாசன் கூறிய கருத்து

  • IndiaGlitz, [Monday,April 25 2016]

மகாத்மா காந்தியின் கேரக்டரை உள்ளடக்கிய 'ஹே ராம்' படத்தை இயக்கி நடித்தவர் கமல்ஹாசன் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கோவையில் உலக புத்தக நாள் விழாவையொட்டி பிரபல எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய மகாத்மா காந்தியின் சத்தியசோதனை' என்ற தமிழ் புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது: 'ஹே ராம்' படம் எடுத்த போதுதான் காந்தி மீதான மதிப்பும், மரியாதையும் எனக்கு அதிகமானது. தலைவர்களாக இருப்பவர்கள் அந்தப் பதவியை கிரீடமாக பார்க்கக் கூடாது. பதவியை எப்போதும் செருப்பாகப் பார்க்க வேண்டும். காந்தி, ஒரு தொண்டனாக இருந்ததாலேயே ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் அடையாளமாகவும், உலக குடிமகனாகவும் திகழ முடிந்தது.
அகிம்சை கொள்கையை அவ்வளவு சீக்கிரம் யாரும் எளிதில் கையில் எடுத்துவிட முடியாது. அகிம்சை குறித்து முழுமையாகப் புரிந்து கொண்டதால்தான் காந்தியால் எடுக்க முடிந்தது. அவரைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொண்டு பேசுபவர்கள் மிகவும் குறைவு. வாக்குக்காகவும், பதவிக்காகவும் பேசி வருபவர்கள்தான் அதிகம். அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். ஆனால், இங்கு அவரது பெயரை மட்டுமே வைத்து அரசியல் நடத்தப்படுகிறது' என்று பேசினார்.