தொலைக்காட்சிக்கு மாறுகிறாரா கமல்ஹாசன்?

  • IndiaGlitz, [Saturday,April 15 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 'சபாஷ் நாயுடு' என்ற படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்தார். இந்த படம் ஆரம்பித்ததில் இருந்தே அவருக்கு சோதனைகள் தொடர்ந்தது. இந்த படத்தின் இயக்குனர் ராஜீவ் குமார் அவர்களுக்கு திடீரென உடல்நலம் குன்றியதால் கமல்ஹாசனே இயக்குனர் பொறுப்பையும் ஏற்றார். மேலும் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்க இருந்த நிலையில் அவர் மாடிப்படிகளில் இருந்து கீழே விழுந்து காயமுற்றார். சமீபத்தில் அவரது வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் மருத்துவரின் ஆலோசனைப்படி இன்னும் சில மாதங்களுக்கு படப்பிடிப்புக்கு செல்ல மாட்டார் என்று கூறப்படுகிறது

எனவே கமல்ஹாசன் இந்த இடைவெளியில் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியில் மிக பிரபலமான தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' தற்போது தமிழில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இந்த ஷோவை கமல்ஹாசன் நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பத்து ஆண்டுகளாக ஹிந்தி பிரபல சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன், சல்மான்கான், சஞ்சய்தத், உள்பட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.