சிஸ்டம் சரியில்லை. ரஜினியின் கருத்து குறித்து கமல்

  • IndiaGlitz, [Friday,May 26 2017]

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த கடந்த வாரம் ரசிகர்களின் சந்திப்பின்போது அரசியலுக்கு வருவது குறித்து மறைமுகமாக சில கருத்துக்களை கூறினார். ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து பல அரசியல்வாதிகள் தங்களுடைய கருத்தை தெரிவித்தனர். ஒருசில அரசியல்வாதிகள் மட்டும் தமிழகத்தை தமிழர் மட்டுமே ஆளவேண்டும், கன்னடரான ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன் தமிழக அரசியல் குறித்து செய்தியாளர் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்தபோது, "நான் இந்தியனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். போட்டி அரசியலில் நான் இல்லை, நான் அரசியலுக்கு வந்து வெகு நாளாகிவிட்டது. எப்போது கையில் மை வைத்தேனோ அப்போதே வந்துவிட்டேன். தற்போதைய அரசியலைப் பார்த்தால் யாருமே அரசியலுக்கு வரக் கூடாது. அரசியல் சம்பாதிக்கும் தொழில் அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். இனிமேல் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகளுக்கு அதிக சம்பளம் கொடுத்து அவர்களை எங்களுக்காக பணியாற்ற வாருங்கள் என்று சொல்லவேண்டும். அதைவிடுத்து தியாகம் செய்ய வாருங்கள் என்று சொன்னால், அவர்கள் அதை வேறுவிதமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்" என்று கூறினார்.

மேலும், சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியதில் தவறில்லை, வித்தியாசமானதும் இல்லை. என்னைக் கூட மலையாளி என்று கேரளாவில் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். அதற்காக நான் கேரளாவில் முதல்வர் ஆவேன் என்பது அர்த்தம் அல்ல. எனக்கு அதில் விருப்பமும் இல்லை என்று கூறினார்.

மேலும் ரஜினி அரசியலுக்குள் வந்தால் அவரை ஆதரிப்பீர்களா? என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த கமல், அதற்கான பதிலை அறிவிக்கும் களம் இது கிடையாது. வேறொரு சந்திப்பில் அதற்கு பதில் கூறுகிறேன்' என்று கூறினார்.