கமல்ஹாசனின் முதல்வர் கவிதை! அரசியலுக்கு தயாராகிவிட்டாரா?
- IndiaGlitz, [Wednesday,July 19 2017]
உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் அவரை மிரட்டும் தொனியில் ஒருசில கருத்துக்களை கூறினர். அதுமட்டுமின்றி அவர் ஒழுங்காக வரி செலுத்தியுள்ளாரா? என்று சோதனை செய்யப்படும் என்றும், அவரை ஒருமையிலும் பேசி சிறுமைப்படுத்தினர்.
இதனால் அரசியலில் குதிக்கும் எண்ணம் இதுவரை இல்லாமல் இருந்த கமல், எந்த நேரத்திலும் அரசியலில் குதிக்கும் அறிவிப்பை வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு கவிதையை அவர் பதிவு செய்துள்ளார். 'முடிவெடுத்தால் யாம் முதல்வர், வாடா தோழா என்னுடன்' போன்ற வரிகள் அவர் அரசியலில் இறங்க முடிவெடுத்துவிட்டதாக நினைக்க தோன்றுகிறது. இதோ அந்தகவிதை.
இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை
துடித்தெழுவோம் மனதளவில்
உம்போல் யாம் மன்னரில்லை
தோற்றிறந்தால் போராளி
முடிவெடுத்தால் யாம் முதல்வர்
அடிபணிவோர் அடிமையரோ?
முடிதுறந்தோர் தோற்றவரோ?
போடா மூடா எனலாம் அது தவறு
தேடாப் பாதைகள் தென்படா
வாடா தோழா என்னுடன்
மூடமை தவிர்க்க முன்னவரே தலைவர்
அமையாது அலைபவர்க்கும்
அமைந்த என் தோழர்க்கும்,
விரைவில் ஒரு விளி கேட்கும்.
கேட்டு அமைதி காப்பீர்.
உண்மை வெயிலில் காயும்
நேற்றைய மழைக்காளான்
இந்த கவிதையில் ஒருசில விஷயங்கள் புரியவில்லை என்றாலும் இன்று அவரிடம் இருந்து விளக்கமான பதில் வரும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றாற்போல் அவர் தனது சமூக வலைத்தளத்தில், 'புரியாதோர்க்கு ஆங்கில பத்திரிக்கைகளில் நாளை வரும் சேதி' என்று குறிப்பிட்டுள்ளார்.