'வசூல் ராஜாவ்'வுக்கு பின் இணையும் கமல்-பிரபு

  • IndiaGlitz, [Sunday,March 06 2016]

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் ஏற்கனவே ஒரிரு படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில் தற்போது புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் 'மீன்குழம்பும் மண்பானையும்' என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் சந்தானம் நடித்த இனிமே இப்படித்தான்' படத்தின் நாயகி ஆஸ்னா ஜாவேரி நாயகியாக நடித்து வருகிறார். மேலும் முக்கிய வேடத்தில் பிரபு நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் சமீபத்தில் நடந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் சிறப்புத்தோற்றத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவாஜி குடும்பத்தின் மீது கமல்ஹாசனுக்கு எப்போதும் ஒரு தனி மரியாதை உண்டு என்பதால் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க கமல் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் மற்றும் பிரபு ஆகியோர் ஏற்கனவே 'வெற்றிவிழா' என்ற படத்தில் இணைந்து நடித்திருக்கும் நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின் தற்போது மீண்டும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.