கமல்ஹாசனுக்கு கிடைக்கவுள்ள அடுத்த மரியாதை
- IndiaGlitz, [Wednesday,January 13 2016]
உலக நாயகன் கமல்ஹாசன் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி இந்திய அளவிலும், உலக அளவிலும் மதிக்கத்தக்க ஒரு நபராக கருதப்படுபவர். இவரது பெருமையை அறிந்து அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம் கமல்ஹாசனை உரை நிகழ்த்த அழைப்பு விடுத்துள்ளது என்பதை சமீபத்தில் பார்த்தோம்.
இந்திய அரசும் கமல்ஹாசனுக்கு பத்மவிருதுகளும் தேசிய விருதுகளும் அளித்து மரியாதை செய்துள்ளது. இந்நிலையில் கமல்ஹாசனுக்கு மேலும் ஒரு கெளரவம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் தணிக்கை குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது என்பதையும் கூடுதல் உறுப்பினர்களை தேர்வு செய்ய பிரபல டைரக்டர் ஷியாம் பெனகல் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் செய்திகளில் அறிந்தோம். இந்த குழு கமல்ஹாசனை தணிக்கை குழு உறுப்பினராக்க சிபாரிசு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கமல்ஹாசன் மட்டுமின்றி பிரபல இயக்குனர்கள் ஷாஜி கருன், கவுதம் கோஷ் ஆகியோரும் தணிக்கை குழு உறுப்பினர்களாக வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஷியாம் பெனகல் தலைமையிலான குழு சமீபத்தில் தகவல் ஒளிபரப்புத்துறை மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியை மும்பையில் சந்தித்து கமல்ஹாசன் உள்பட ஒருசிலரை தணிக்கை குழுவில் சேர்க்க பரிந்துரை செய்துள்ளதாகவும் எந்த நேரமும் தணிக்கை குழுவின் புதிய உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.