சினிமாவை விட்டு விலகவும் தயங்க மாட்டேன். கமல் அதிரடி பேச்சு
- IndiaGlitz, [Saturday,June 03 2017]
உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில வருடங்களுக்கு முன் 'விஸ்வரூபம்' படத்தின் பிரச்சனையை சந்தித்தபோது, 'நாட்டை விட்டு வெளியேறுவேன்' என்று அதிரடியாக அறிவித்தார். இந்த நிலையில் இன்று 'சினிமாவை விட்டு விலகவும் தயங்க மாட்டேன்' என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
மத்திய அரசு வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்படி இனிமேல் திரைப்படங்களுக்கு தேசிய அளவில் தயாரிப்பாளர்கள் 28% வரி கட்ட வேண்டிய நிலை ஏற்படும். தற்போது தமிழக அரசு 30% வரி விகித்தாலும் தமிழில் தலைப்பு வைக்கும் படங்களுக்கு வரிவிலக்கு அளித்து வருகிறது. ஆனால் ஜிஎஸ்டி அமலானால் எந்தவித வரிவிலக்கும் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்காது. மத்திய அரசின் 28% ஜிஎஸ்டி வரி கட்டியே ஆக வேண்டும்
இந்நிலையில் சினிமாவுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து தென்னிந்திய வர்த்தக சபை ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட கமல் பேசியதாவது:
சினிமா என்பது கலை அது சூதாட்டம் அல்ல, புதிதாக அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி வரி திரைப்பட தயாரிப்புக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்க உள்ளதாக அறிய வருகிறோம்.
ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு வரி என்ற அடிப்படையில் திரைத்துறைக்கு ஒரே மாதிரியான வரியை கொண்டு வருவது சரியானதாக இருக்காது. இந்தி சினிமாவுக்கு இணையாக பிராந்திய மொழி படங்களுக்கு வரி விதிப்பது என்பது தயாரிப்பாளர்களுக்கு கட்டுப்படியாகாத ஒன்று.
இந்தி மொழி திரைப்படங்களுக்கு சந்தை வேறு, பிராந்திய மொழி படங்களுக்கான சந்தை வேறு. மேலும் சூதாட்ட விடுதிகளுக்கும் 28 % வரி திரைப்படங்களுக்கும் 28% வரி என்பதை எப்படி ஏற்பது. மேலும் இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடு, இங்கு ஒற்றை கலாச்சாரம் பழக்க வழக்கம் ஆகியவற்றை கொண்டு வரவே முடியாது. அப்படி முயற்சிப்பது வீண்.
இது போன்ற நடவடிக்கைகள் அங்கு தான் இட்டுச் செல்லும் பிராந்திய மொழி படங்களுக்கு இந்த அளவுக்கு வரி விதித்தால் அது மூழ்கும் நிலையே உருவாகும். எனவே, சினிமா டிக்கெட்டுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் முடிவை கைவிடுவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். டிக்கெட் மீதான ஜி.எஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க நிதி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரியை குறைக்காவிட்டால் நான் சினிமாவை விட்டு விலகவும் தயங்க மாட்டேன்' என்று கூறினார்.
கமல்ஹாசனின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.