நான் தடைக்கு எதிரானவன். பீட்டா உள்பட எதையும் தடை செய்ய வேண்டாம். கமல்
- IndiaGlitz, [Tuesday,January 24 2017]
கடந்த சில நாட்களாக சென்னை மெரீனா உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள் இளைஞர்களின் இன்னொரு கோரிக்கை பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்பதுதான். ஆனால் பீட்டா உள்பட எந்த அமைப்பையும் தடை செய்ய வேண்டாம், அவர்களின் செயல்களை முறைப்படுத்தினால் போதும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
பீட்டாவை தடை செய்ய வேண்டுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், 'ஜல்லிக்கட்டு, பீட்டா, என்னுடைய படம் உள்பட அனைத்து தடைகளுக்கும் எதிரானவன் நான். பீட்டாவை தடை செய்தால் வேறு பெயரில் அவர்கள் வருவார்கள். விலங்குகளுக்கும் நிச்சயம் ஒரு அமைப்பு வேண்டும். விலங்கு நல ஆர்வலர்கள் கண்டிப்பாகத் தேவை. ஆனால் அதே நேரத்தில் பீட்டா தங்கள் செயல்களை முறைப்படுத்தவேண்டும்' என்று கூறினார்.
மேலும் இன்னொரு கேள்விக்கு பதிலளிக்கையில் தமிழக முதல்வர் ஜல்லிக்கட்டு விஷயத்தில் தன்னால் முடிந்ததை செய்திருந்தாலும், இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்தார்.
மேலும் போலீஸ் வன்முறை குறித்த கேள்வி ஒன்றுக்கு, 'இளைஞர்களில் மோசமானவர்கள் சிலர் இருந்ததுபோல காவல்துறையிலும் கெட்டவர்கள் சிலர் இருக்கலாம். அதற்காக காவல்துறையே மோசம் என்று சொல்ல முடியாது' என்று கூறினார்.