எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் ஜல்லிகட்டு பிரச்சனை எப்படி இருந்திருக்கும். கமல் பேட்டி
- IndiaGlitz, [Tuesday,January 24 2017]
ஜல்லிக்கட்டுக்காக மாணவர்களின் புரட்சி போராட்டம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இந்த போராட்டத்தில் மாணவர்களுக்கு வெற்றி கிடைத்தாலும் கடைசியில் வன்முறையில் இந்த போராட்டம் முடிந்தது ஒரு கரும்புள்ளியாகவே கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆரம்பம் முதல் தனது சமூக வலைத்தளத்தில் ஆதரவு கொடுத்து அவ்வப்போது மாணவர்களுக்கு ஊக்கம் கொடுத்து வந்தவர் உலக நாயகன் கமல்ஹாசன்.
மாணவர்களின் அமைதியான போராட்டம், வன்முறை, காவல்துறையினரின் தடியடி குறித்து சற்று முன் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
சென்னையில் நடந்த வன்முறை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. குறிப்பாக தமிழர்களின் கலாசாரம் மீதான ஊடுருவலைத் தடுக்கவேண்டும்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இப்போது நம்மிடம் இருந்திருந்தால் கண்டிப்பாக அவர் போராட்டக் களத்துக்கு வருகை தந்து மாணவர்களுடன் இணைந்து போராடியிருப்பார். போராட்டக் களத்தில் உள்ளே நுழைவதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும் நிச்சயம் அவர் பின்வாங்கி இருக்கமாட்டார்.
எங்களது ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது. இளைஞர்களின் போராட்டத்தின் மீது அரசியல் கட்சிகளின் சாயம் பூசப்படுவதை ஏற்கமுடியாது. இந்த போராட்டத்தின் உண்மையான காரணம் அரசு மீது இருந்த அதிருப்தியின் அடையாளம்தான். இவ்வாறு கமல்ஹாசன் தனது பேட்டியில் கூறியிருந்தார்.