'விஸ்வரூபம் 2' படத்துக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். கமல்ஹாசன்
- IndiaGlitz, [Thursday,March 30 2017]
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து, தயாரித்து இயக்கிய 'விஸ்வரூபம்' படத்திற்கு ஏற்பட்ட தடை நாடு அறிந்தது. ஒருசில மத அமைப்புகளும், அன்றைய தமிழக அரசும் மாறி மாறி தடை போட்டது. பின்னர் நீதிமன்றம் வரை சென்று அந்த படத்தை கமல் ரிலீஸ் செய்தார். இந்நிலையில் இந்த படத்திற்கு ஏற்பட்ட சிக்கல், மற்றும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கமல் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியதாவது:
"எனது 'விஸ்வரூபம்' படத்திற்குத் தடை விதிக்கப்பட்டபோது சட்டப் போராட்டத்தின் வாயிலாகத் தடையை நீக்கப்பெற்றோம். ஆனாலும், அப்போது ஆட்சியிலிருந்த அரசு படத்தை மீண்டும் தடை செய்தது. மக்கள் ஆதரவு பெருகிய பின்னரே படத்தின் மீதான தடையை அவர்கள் நீக்கினர். எனது நிதிநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அவர்கள் திட்டமும் அதுவே.
எனது சொத்துகள் அனைத்தையும் அடகு வைத்தேன். நான் பணிவானவன் என்றே அறியப்பட விரும்பினேன். ஆனால், அவமானத்துக்குள்ளானேன். கிட்டத்தட்ட நொறுக்கப்பட்டேன். அம்னீஸியா என்ற மறதி நோய் நமது தேசத்தில் புரையோடிக் கிடக்கிறது.
ஊழலில் திளைத்திருக்கும் ஒரு தேசத்தில் எனக்கு நேர்ந்தது போன்ற சம்பவங்கள் எளிதாக மறக்கப்படும். எப்போதுமே வரி ஏய்ப்பு செய்திராத நான் ரூ.60 கோடி இழந்தேன். மக்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். அவர்களே என்னை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றனர். 'விஸ்வரூபம் 2'ம் பாகத்துக்குச் சிக்கல்கள் வராது என நான் நம்புகிறேன். இருந்தாலும்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம் அல்லவா?' என்று கூறியுள்ளார்.