ரஜினியுடன் கூட்டணி: சமிக்ஞை காட்டிய கமல்
- IndiaGlitz, [Thursday,January 25 2018]
கோலிவுட் திரையுலகின் இரண்டு ஜாம்பவான்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் அரசியலுக்கு தனித்தனி கட்சிகள் ஆரம்பித்து வரவுள்ளனர். இருவருக்கும் இடையில் அடிப்படையிலேயே வேற்றுமை இருப்பதால் தனித்தனியாக கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் பகுத்தறிவு பாதையிலும், ரஜினிகாந்த் ஆன்மீக பாதையிலும் தங்கள் அரசியல் பயணத்தை தொடரவுள்ளனர்.
இருப்பினும் இருவருக்கும் தமிழக மக்களின் நலன் மற்றும் ஊழல் ஒழிப்பு என்ற குறிக்கோள்கள் இருப்பதால் தேர்தல் நேரத்தில் இருவரும் இணைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
சமீபத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து அரசியல் செய்வீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினி, 'காலம் தான் அதை தீர்மானம் செய்யும்' என்றார். இந்த கருத்தை கமலும் ஆமோதித்தார்.
இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் கமல் பேட்டியளித்தபோது, 'தமிழக மக்களை மேம்படுத்த எத்தகைய எதிர்ப்புகளையும் நானும் ரஜினிகாந்தும் இணைந்து எதிர்கொள்வோம்' என்று கூறினார். இது ரஜினியுடன் அவர் கூட்டணி அமைக்க தெரிவித்த சம்மதத்தின் சமிக்ஞயாகவே கருதப்படுகிறது. கமல், ரஜினி கூட்டணி சேர்ந்து இந்த கூட்டணியை கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் ஆதரவு அளித்தால் தமிழகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.