தமிழகத்தின் வெற்றிடத்தை நிரப்புவாரா கமல்ஹாசன்?

  • IndiaGlitz, [Thursday,July 20 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, திமுக தலைவர் கருணாநிதியின் முதுமை ஆகியவைகளால் தமிழகம் ஒரு முதுகெலும்பில்லாத தலைவர் இல்லாத மாநிலமாக காணப்படுவதாக அரசியல் விமர்சகர்களும் ஊடகங்களும் கூறி வருகின்றன. காமன்மேன் என்று கூறப்படும் எந்த கட்சியையும் சாராத பொதுமக்கள் ஒரு ஆளுமை உள்ள, நேர்மையான, தன்னலமில்லாத தலைவரை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

காமராஜர், கக்கன் போன்ற தலைவர்கள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை குறைந்தபட்சம் மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு காது கொடுத்து கேட்கும் அரசியல் தலைவர் ஒருவர் தேவை என்பதுதான் அனைவரின் கருத்தாக உள்ளது. இந்த நிலையில் கடலில் தத்தளித்து கொண்டிருந்த ஒருவனுக்கு சிறு மரக்கட்டை கிடைத்தது போல் கமலின் அரசியல் டுவீட்டுக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கமல்ஹாசன் தனிப்பட்ட முறையில் தாக்கப்படுவதாலும், விமர்சிக்கப்படுவதாலும் அரசியலுக்கு வருவதாக கூறுகின்றார் என்று ஒருசிலர் கூறினாலும் கமல் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும்? ஆட்சியை பிடிப்பாரா? இன்றைய அரசியல்வாதிகளுக்கு மாற்றாக இருப்பாரா? என்பதை பார்ப்போம்

ஆரோக்கிய அரசியல்: கமல்ஹாசன் மீது இதுவரை எந்தவிதமான பொருளாதார குற்றச்சாட்டும் இருந்ததில்லை. கருப்பாக ஒரு சம்பளமும், வெள்ளையாக ஒரு சம்பளமும் வாங்கும் நடிகர்கள் மத்தியில் ஒழுங்காக வருமானவரி கட்டும் ஒருசில நடிகர்களில் கமலும் ஒருவர். பல வருடங்களாக நற்பணி இயக்கத்தை நடத்தி சமூக சேவைகள் செய்து வரும் கமல், நிச்சயம் ஆரோக்கியமான அரசியலையும் தருவார் என்று நம்பலாம். மக்களுக்கு சேவை செய்ய நல்ல மனம் இருந்தால் போதும், அதுவே ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதல்படியாக அமையும்

மொழி அறிவு: ரஜினியை கூறியது போல கமல்ஹாசனை இவர் தமிழர் அல்ல, தமிழ் தெரியாதவர், தமிழ்நாட்டின் எல்லைகள் தெரியாதவர் என்று யாரும் கைநீட்டி கூற முடியாது. பள்ளி, கல்லூரி படிப்பு இல்லை என்றாலும் அவருடைய அனுபவ படிப்பு, பட்டமேற்படிப்பு படித்தவர்களைவிட பெரியது. குறிப்பாக அவரது தமிழ் மொழிப்புலமை பெரிய கவிஞர்களுக்கு இணையானது. ஒரு மொழியின் மீது தீராக்காதல் வைத்த ஒருவரால், அந்த மொழியை பேசும் மக்களின் நலனிலும் அக்கறை செலுத்த முடியும்

அறிவு-புத்திசாலித்தனம்: ஒரு மாநிலத்தை ஆளும் தலைமை பதவி என்பது சாதாரணம் அல்ல. நல்ல புத்திசாலியாகவும், தீர்க்கமான முடிவு, அதே நேரத்தில் விரைந்து முடிவெடுக்கும் திறன் வேண்டும்., ஜெயலலிதா, கருணாநிதி இருவரிடத்திலும் அது இருந்ததால்தான் இத்தனை வருடம் ஆளுமையாக இருக்க முடிந்தது. கமல்ஹாசனை எடுத்து கொண்டால் திரைப்படத்தில் அவரது தொலைநோக்கு பார்வையில் இருந்தே அவரது புத்திசாலித்தனத்தை தெரிந்து கொள்ளலாம். வெளிநாட்டில் அறிமுகமாகும் லேட்டஸ்ட் டெக்னாலஜியை தமிழ் படத்தில் புகுத்துவதை போல, வெளிநாட்டில் வெற்றி பெற்ற மக்களுக்கு தேவையான திட்டங்களை அவர் கொண்டு வருவார் என்று நம்பலாம். திரையுலகை தாண்டி அரசியலிலும் அவர் தனது புத்திசாலித்தனத்தை நிரூபித்தால் நமது மாநிலம் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வெகுகாலம் தேவையில்லை

நிபுணர்களின் சேர்க்கை: திரையுலகில் இருந்தபோதே அவருக்கு நெருக்கமானவர்கள் அனைவருமே அந்தந்த துறையில் நிபுணர்களாக இருப்பதை பார்த்துள்ளோம். சுஜாதா முதல் எஸ்.ராமகிருஷ்ணன் வரை கமலின் நண்பர்கள் வட்டாரத்தை பார்த்தாலோ அவருடைய அறிவுக்கூர்மை தெரிய வரும். அரசியலுக்கு வந்துவிட்டால் அரசியல் நிபுணர்களுடன் இணைந்து அவர் தன்னுடைய திறமையை வளர்த்து கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது

வேகமாக புரிந்து கொள்ளும் தன்மை: கமல்ஹாசன் ஒரு நடிகராக இருந்தாலும் திரையுலகில் அவர் தொடாத துறைகளே இல்லை. லைட்டிங் முதல் இயக்கம் வரை அனைத்தும் அவருக்கு அத்துப்பிடி. எந்த ஒரு துறையையும் ஈடுபாட்டுடன் கவனித்து அந்த துறையின் நுணுக்கங்களை எளிதில் கற்றுக்கொள்ளும் கமல், அரசியலை கற்று கொள்ள அதிக நாட்கள் எடுக்க மாட்டார் என்றே தோன்றுகிறது

முன்கூட்டியே தீர்மானித்தல் - தொலைநோக்கு பார்வை: டால்பி, சாட்டிலைட் டிவி, சுனாமி, டிடிஎச் போன்ற வார்த்தைகள் என்னவென்றே தெரியாத தமிழகத்திற்கு இந்த வார்த்தைகளை அறிமுகம் செய்ததே கமல்ஹாசனின் படங்கள்தான். பத்து வருடங்களுக்கு பின்னர் திரையுலகம் எப்படி இருக்கும் என்பதை சரியாக கணிக்கும் திறன் உள்ள கமலுக்கு, பத்து வருடங்களுக்கு பின் நாட்டின் வளர்ச்சிக்கு என்ன தேவை என்பதை கணிப்பது பெரிய விஷயமாக இருக்காது. அவருடைய தொலைநோக்கு பார்வை குறித்த சந்தேகம் அவருடைய எதிரிகளுக்கு கூட வராது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனை பற்றி குறை என்று சொல்பவர்கள் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை மட்டும் சொல்ல வாய்ப்பு உள்ளது. விவாகரத்துகள், லிவிங் டுகெதர் ஆகியவற்றை சுட்டிக்காட்டி மக்களின் மனதை மாற்ற முயற்சிக்கலாம்

மேலும் கமல்ஹாசன் கூறும் சில கருத்துக்கள் பலருக்கு புரியாமல் இருப்பதும் ஒரு மைனஸ் ஆக பார்க்கப்படலாம். கேட்போரைக் கவரும் தன்மையுடைதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். கமலின் சொல்வன்மை கொஞ்சம் அதிகப்படியாக உள்ளதால் படித்தவர்கள் புரிந்து கொள்வதே கடினமாக உள்ள நிலையில் பாமரர்கள் எப்படி புரிந்து கொள்ள முடியும். கமல்ஹாசனின் 'குணா', குருதிப்புனல்' ஆகிய படங்கள் இன்னும் பலருக்கு புரியாமல் உள்ளது. ஆனால் அரசியல் களத்தில் இறங்கிவிட்டால் அவர் தன்னை மாற்றி கொண்டு தனது புலமையை எளிமைப்படுத்தி கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.

இத்தனை ஆண்டுகளாக எதிர்க்கட்சிகளும் ஊடகங்களூம் செய்த, செய்து கொண்டிருக்கின்ற விமர்சனங்களை கண்டும் காணாமலும் இருந்த அரசு, கமலின் விமர்சனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை வரிந்து கட்டிக்கொண்டு பதில் சொல்வதில் இருந்தே கமலின் அஸ்திரம் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது என்றே தோன்றுகிறது. ஊழல் மலிந்துள்ள ஒரு அரசை, எந்த ஆயுதத்தைக் கொண்டும் தாக்கலாம். தாக்க வேண்டும். அப்படி புதிதாக தாக்கும் ஆயுதமாக கமல்ஹாசன் என்ற ஒரு ஆயுதம் உருவாகியிருக்கிறதென்றால் அனைவருக்கும் மகிழ்ச்சியே. இது காலத்தின் கட்டாய தேவை. முடிவு எடுக்கக்கூடிய மக்கள் சிந்திக்க வேண்டும்.

கமல்ஹாசன் அரசியலுக்கு வரலாமா? வந்தால் அரசியலில் மாற்றம் ஏற்படுமா? கமல்ஹாசனுக்கு உங்கள் ஆதரவு உண்டா? என்பது குறித்து உங்கள் கருத்தை இந்த டுவிட்டர் பக்கத்தில் வாக்களியுங்கள்

More News

10 படத்துல நடிச்சிட்டு முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவதா? டாக்டர் கிருஷ்ணசாமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி இல்லாத அரசியல் களத்தில் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்று ஒருசில கட்சிகள் கனவு கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு இடியாய் இறங்கிய செய்தி தான் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் அரசியல் வருகை குறித்த செய்திகள்...

ஒரே மேடையில் கமல்-ரஜினி! மீண்டும் ஒரு ஆகஸ்ட் புரட்சி?

1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி வெள்ளையனை வெளியேற்றுவதற்காக தேசப்பிதா மகாத்மா காந்தி நடத்திய போராட்டம் தான் ஆகஸ்ட் புரட்சி என்று அழைக்கப்படுகிறது

'விஐபி 2' படத்தை அடுத்து முடிவுக்கு வந்தது தனுஷின் அடுத்த படம்

தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் நடித்த 'விஐபி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இம்மாதம் 28ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

ஸ்டாலின், ஓபிஎஸ் உடன் கமல் கூட்டணியா? அமைச்சர் ஜெயகுமார் சந்தேகம்

உலக நாயகன் கமல்ஹாசனின் அரசியல் விஸ்வரூபம் ஆரம்பித்துவிட்டது என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மற்றும் அமைச்சர்களை கண்டால் நடுங்கும் நடிகர்களின் மத்தியில் கமல்ஹாசனின் ஒவ்வொரு அறிக்கையும் பேட்டியும், தமிழக ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறியுள்ளது...

சாருஹாசன் படக்குழுவினர்களுக்கு ஆச்சரியம் அளித்த கீர்த்திசுரேஷ்

கோலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கீர்த்திசுரேஷ், ஒரு கலைக்குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே...