ஏதாவது தப்பாக சொல்லிவிட்டேனா! ஒருமையில் பேசிய அமைச்சருக்கு கமலின் நக்கல் பதில்

  • IndiaGlitz, [Friday,July 21 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபகாலமாக தமிழக அரசின் ஊழல் குறித்து பேசி வருவதால் அவரை மிரட்டும் தொனியிலும், ஒருமையிலும் ஒருசில அமைச்சர்கள் பேசி வந்தனர். இதற்கு கமல்ஹாசன் ரசிகர்களும் எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் கமல் தனக்கே உரிய நக்கலுடன் இதற்கு பதிலளித்துள்ளார்.

சச்சின் தெண்டுல்கரின் 'தமிழ் தலைவாஸ்' கபடி அணியின் விளம்பர தூதுவராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் கமல்ஹாசன் நேற்று இந்த அணியின் ஜெர்சி அறிமுக விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: 'தமிழ் தலைவாஸ்' எனப் பன்மையில் பெயர் வைத்தது சந்தோஷமாக இருக்கிறது. சமீபகாலமாக ஒருமையில் பேசுவது வழக்கமாகி விட்டது. (அரங்கில் பயங்கர கைதட்டல் ) கைதட்டிய பார்வையாளர்களை பார்த்து 'ஏதாவது தப்பாக சொல்லிவிட்டேனா' என்று கமல் கேட்டார். மேலும் 'இந்தத் தலைப்பின் மூலம் எல்லோரும் இந்நாட்டின் மன்னரே என தமிழ் தலைவாஸ் அணியினர் கூறியுள்ளதாக கமல் தெரிவித்தார்.

மேலும் தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர் சச்சின் குறித்து கமல் கூறியபோது, 'இந்திய விளையாட்டுகளில் மூத்த அண்ணனாக திகழும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட சச்சின் கபடியை கையில் எடுத்திருப்பது ஒரு பெருமைக்குரிய விஷயம். அவருடைய பெருந்தன்மை என்பதை விட, இது கபடிக்கு கிடைத்த பெருமையாகவும் நினைக்கிறேன். அது பாராட்டுக்குரியது என்று கூறினார்.