மோடி பதவியேற்பு விழாவுக்கு கமலுக்கு அழைப்பு இல்லையா?

இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நாளை பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நேற்றைய பேட்டியில் உறுதி செய்த ரஜினிகாந்த், பதவியேற்பு விழாவில் தான் கலந்து கொள்ள போவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசிய கமலுக்கு பாஜக அழைப்பா? என பலர் ஆச்சரியம் அடைந்தனர். ஆனால் இந்த அழைப்பை கமல்ஹாசனோ, மக்கள் நீதி மய்யம் கட்சியோ இன்னும் உறுதி செய்யவில்லை.

இந்த நிலையில் 'கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்ததாக செய்தியை பரப்பியது யார்?' என்று பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதில் இருந்து கமலுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. அதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு வந்ததாக வெளிவந்த செய்தியிலும் உண்மையில்லை என்று கூறப்படுகிறது