பிரபல புத்தமத தலைவருடன் கமல்-கவுதமி சந்திப்பு

  • IndiaGlitz, [Wednesday,November 11 2015]

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நேற்று கமல்ஹாசன் மற்றும் கெளதமி ஆகிய இருவரும் திபெத்திய புத்தமத தலைவர் தலாய்லாமா அவர்களை நேரில் சந்தித்துள்ளனர். பகுத்தறிவாளரான கமல், புத்த மதத்தலைவர் ஒருவரை சந்தித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கமல் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது, 'நான் தலாய்லாமாவை இன்று சந்தித்தேன். இந்த சந்திப்பு மிகவும் அற்புதமாக இருந்தது. காந்திஜியின் ரசிகனாக இருந்தாலும் தலாய்லாமாவின் ஆர்வலராக இருக்கலாம் என உணர்ந்தேன். ஒரு பகுத்தறிவாளன், ஆன்மிக நாட்டம் இல்லாதவனாக இருந்தாலும் அவருடனான இந்த சந்திப்பு அர்த்தமுள்ளதாய் அமைந்தது.

ஆன்மிகத்தில் எனக்கில்லாத நாட்டம், சினிமா மீது அவருக்கு இல்லாத நாட்டம் எங்களுக்குள் ஒத்துபோனது. 'நான் எந்த ஒரு படமோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியோ பார்த்ததேயில்லை' என்று புன்னகையுடன் கூறினார். அதற்கு பதிலாக அகில உலகம் முழுவதும் இந்தியாவின் யுக்தியான அகிம்சையை பயன்படுத்தி தத்துவங்களை பரப்பி வருகிறேன் என்று கூறினார்.

சம்மந்தமே இல்லாத இரு வேறு எண்ணங்களை கொண்ட எங்களின் கருத்துப் பரிமாற்றம் சிறப்பாக அமைந்தது. இறுதியில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ் ஜெயின் தத்துவமான "யாதும் ஊரே யாவரும் கேளிர்" கவிதையை எனக்கு நினைவுப்படுத்தினார்

இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.