இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்து கொண்ட விழாவில் கமல்ஹாசன்
- IndiaGlitz, [Tuesday,February 28 2017]
உலக நாயகன் கமல்ஹாசனின் கனவுப்படங்களில் ஒன்றான 'மருதநாயகம்' படத்தின் படப்பிடிப்பை கடந்த 1997ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணி எலிசபெத் சென்னையில் நடந்த விழா ஒன்றில் தொடங்கி வைத்தார். இருபது வருடம் ஆகிவிட்ட நிலையிலும் இந்த படம் ஒருசில காரணங்களால் பாதியிலேயே உள்ளது. இந்த படத்தை மிக விரைவில் மீண்டும் கமல் தொடரவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மருதநாயகம்' தொடக்கவிழா நடந்து சரியாக 20 வருடம் ஆகியுள்ள நிலையில் மீண்டும் இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்து கொள்ளும் விழாவில் கமல் பங்கேற்கிறார். இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு விழா இன்று மாலை லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மைனையில் நடைபெறுகிறது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் துவக்கி வைக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் முக்கிய விருந்தினர்களில் ஒருவர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் கலந்து கொள்வது குறித்து கமல்ஹாசன் கூறியதாவது: பிரதமர் மோடி எனது பெயரை முன்மொழிந்ததை மிகப் பெரும் கவுரவமாகக் கருதுகிறேன். இந்தியா-இங்கிலாந்து இடையேயான வரலாற்றை, கலாச்சார விழாவாக கொண்டாடும் இந்த தருணம் மிகச்சிறந்தது. இந்தியாவில் உள்ள பல மொழிகளை இணைக்கும் பாலமாக ஆங்கிலம் இருப்பது சிறப்பான ஒன்று என்று கமல்ஹாசன் கூறினார்
மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் சார்பில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ், பாடகரும் நடிகருமான குர்தாஸ் மன், ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் ஆரோரா, மணீஷ் மல்கோத்ரா மற்றும் அனோஷ்கா ஷங்கர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.