கமல் அறிவிப்பு எதிரொலி: காணாமல் போன அமைச்சர்களின் இமெயில்கள்
- IndiaGlitz, [Friday,July 21 2017]
தமிழக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை நடிகர் கமல்ஹாசன் முன்வைத்தபோது 'இவரெல்லாம் ஒரு ஆளா? என்று கேட்ட அமைச்சர்கள் இன்று அவருடைய ஒரே ஒரு அறிக்கைக்கு பயந்து தங்களுடைய இணையதள முகப்பு பக்கங்களில் இருந்த இ-மெயில் முகவாிகளை அழித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஊழல் நடந்ததற்கு ஆதாரம் காட்டுங்கள் என்று அமைச்சர்கள் சிலர் கூறியபோது அதற்கு கமல், இது டிஜிட்டல் உலகம், எனவே முறைகேடுகளை இமெயில் மூலம் அந்தந்த துறைக்கு அனுப்புங்கள்' என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையில்தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிதியமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களின் இ-மெயில் முகவாிகளும் அவர்களுடைய இணையதளங்களில் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி ஒரு சிலாின் தொலைபேசி எண்களையும் காணவில்லை.
இந்த விஷயத்தை கமலுக்கு கிடைத்த முதல் வெற்றியாக நெட்டிசன்களும் கமல் ஆதரவாளர்களும் கொண்டாடி வருகின்றனர். இருப்பினும் அமைச்சர்களின் இமெயில்கள் அவர்களுடைய இணையதளத்தில் இல்லாவிட்டாலும் “http://www.assembly.tn.gov.in/15thassembly/honcm.html“ இந்த தளத்தில் அனைத்து எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களின் இமெயில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.