மோடியா? இந்த தாடியா? மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாணியில் நடிகர் கமல்ஹாசன்!

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி 5 முனை போட்டி நிலவுகிறது. இதில் நடிகர் கமல்ஹாசன் முதல் முறையாக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால் இவரைக் குறித்து சில எதிர்மறையான விமர்சனங்களும் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக நடிகர் கமல் பி.டீம் என விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த விமர்சனத்தைப் பொய்யாக்கும் வகையில் மயிலாப்பூர் தொகுதியில் நிற்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நடிகர் கமல் கோவை தெற்கு தொகுதியில் அதுவும் நேரடியாக பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை எதிர்த்து போட்டியிடுகிறார்.

அதோடு தனி விமானம், ஹெலிகாப்டரில் சென்று வாக்கு சேகரிப்பது போன்ற நடிகர் கமலின் சில தனித்த செயல்பாடுகளும் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு கடந்த சில தினங்களுக்கு மநீம கட்சியின் பொருளாளர் மீது திடீர் வருமான வரிச்சோதனை நடத்தப்பட்டது. இதில் பல கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது. இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் மநீம வேட்பாளர் வீரசக்தியை ஆதரித்து நடிகர் கமல் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், “ஏழ்மையை வெகு ஜாக்கிரதையாக அரசியல் கட்சிகள் பாதுகாக்கின்றன. அதனால்தான் ஏழ்மையின் மீது எனக்கு கோபம் இருக்கிறது. நேர்மை என்பது பசி போல் தினமும் இருக்க வேண்டும். நேர்மையோடு வாழ வேண்டும்.

நான் உதயநிதி தயாரிப்பில் நடித்துள்ளேன். அவர்களோடு தொடர்பு வைத்திருக்கிறேன் என்பதற்காக நான் ஊழல் செய்து விடுவேனா? அது வேறு இது வேறு. தமிழில் வசனம் எழுத ஆள் இல்லாததால் வட நாட்டில் இருந்து தேர்தல் வெற்றிக்காக ஒரு ஆளை அழைத்து வந்துள்ளார்கள்.

மேலும் என்னை பீ-டீம் என பரப்பியது திமுகதான். நான் ஒருவருக்கு பீ டீமாக இருப்பேன் என்றால் அது காந்திக்கு தான். திமுக வெற்றி பெற்றால் அவர்களும் மத்திய அரசுக்கு கை கட்டி இருப்பார்கள். லேடியா? மோடியா? என ஜெயலலிதா பேசினார். நான் இப்போது கேட்கிறேன் மோடியா? இந்த தாடியா? மத்திய அரசை தைரியமாக கேள்வி கேட்க ஆள் வேண்டும்” என ஆவேசமாக பேசியுள்ளார்.