எனக்கு அக்னிப்பரிட்சை வைக்க வேண்டாம். பிறந்த நாள் விழாவில் கமல் பேச்சு
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று உலக நாயகன் கமல்ஹாசன் தனது 61வது பிறந்த நாளை வெகுசிறப்பாக கொண்டாடினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா அரங்கத்தில் நடைபெற்ற தனது பிறந்த நாள் விழாவில் கமல் நற்பணி மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
அதன்பின்னர் ரசிகர்களிடையே உரையாற்றிய கமல், "இந்த மேடைக்கு நான் வந்தபோது ஒரு அம்மா அன்போடு என்னுடைய நெற்றியில் திருநீறு பூசி எனக்கு திருவருட்பா புத்தகத்தை கொடுத்தார்கள். நான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன். அந்த புத்தகம் யாருக்காவது பயன்படும். அல்லது எனக்கே கூட தமிழை வளர்க்க பயன்படலாம். அவர் பூசிய திருநீறை அவருக்கு முன் அழிக்க மாட்டேன். அதுதான் என் பகுத்தறிவு
மரணத்தை வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டவர்களில் ஒருவன் நான். அதனால்தான் எனது பிறந்த நாளும், என்னுடைய தகப்பனாரின் இறந்த நாளும் ஒரே நாளில் வந்துள்ளது. மரணத்தை எத்தனை நாள் தள்ளிப்போடுகின்றோமோ அத்தனை நாள் நல்லது என்று நினைப்பவன் நான் அல்ல. எனது கடமைகளில் ஒன்றாகவே நான் நினைக்கின்றேன்.
எனக்கு நாத்திகன் என்ற பெயரிலேயே விருப்பம் கிடையாது. நான் நாத்திகன் அல்ல. நான் பகுத்தறிவாளன். ஒரு மந்திரசக்தி உள்ள சாமியார், ஒரு மகாசக்தியுள்ள தெய்வத்தை வரவழைத்து காட்டினால் அவரை கைகுலுக்கி வரவழைப்பேன். ஆனால் கும்பிட மாட்டேன்
உங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்கவில்லை என்றால் அதை சாப்பிடாதீர்கள். அந்த இறைச்சியை எதனால் சாப்பிடக்கூடாது என்பது மருத்துவ ஆதாரங்கள் இருக்கின்றது. அதனால் அதை சாப்பிட வேண்டாம். நான் மாட்டிறைச்சி ஒருகாலத்தில் சாப்பிட்டுக்கொண்டுதான் இருந்தேன். ஆனால் தற்போது என்னை விட பெரிய மிருகங்களை சாப்பிடுவதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். உங்களுக்கு எது பிடிக்கின்றதோ அதை சாப்பிடுங்கள். சாப்பாடு இல்லாதவர்களுக்கு சாப்பாடு போடவேண்டுமே தவிர மெனு கார்டு கொடுக்க கூடாது. முதலில் மனிதர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். அதற்கு பின்னர் மிருகங்களிடம் அன்பு கொள்ளலாம். பூச்சிகளை சாப்பிடுவது நல்லது என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்துகிறார்கள். 30 ஆண்டுகளுக்கு பின்னர் பூச்சிகள் உணவு மிகப்பெரிய வியாபாரமாகவும் ஆகலாம்.
மகாத்மா காந்தி வெள்ளைக்காரர்களிடம் இருந்துதான் வழக்கறிஞர் பட்டம் பெற்றார். சுதந்திரம் பெற்ற பிறகு அதை அவர் திருப்பியா கொடுத்தார்? அதை திருப்பி கொடுப்பதால் என்ன சாதிக்க முடியும்? விருதுகளை அரசு எனக்கு கொடுக்கவில்லை. அறிஞர்கள் தேர்ந்தெடுத்து தந்த விருதை திரும்ப தந்து அவமதிக்கமாட்டேன்.
என்னுடைய பேச்சுரிமைக்கு பாதிப்பு ஏற்பட்டால் எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சிக்கு எதிராக குரல் கொடுப்பேன். அதற்கு கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இப்படி பேசுவதால், நலத்திட்டங்கள் வழங்குவதால் நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்கிறார்கள். நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன், கண்டிப்பாக நான் அரசியலுக்கு வர மாட்டேன். அது வேறு ஒரு தளம். 5 ஆண்டுக்கு ஒருமுறை எமது விரலில் கறை படிவதே போதும். வேறு எந்த கறையும் வேண்டாம்.
என்னை அரசியலுக்கு இழுப்பது யார் என்று தெரியும். கமல்ஹாசன் என்ற பேருந்தில் ஏறினால் பாதியில் பேருந்தை நிறுத்தி இறக்கி விட்டுவிடுவேன். என்னுடன் இருப்பவர்கள் அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. அரசியல் பற்றி புரியாதவர்களும் அல்ல. அரசியல் புரிந்ததால்தான் விலகி நிற்கிறோம். அரசியல் புரிந்ததால்தான் விலகி நிற்கிறோம். பகுத்தறிவு என்பது அரசியலால் எமக்கு கிடைக்கவில்லை
எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நற்பணிகள் செய்யும் எங்கள் தோழர்களை அவர்கள் வேலையை செய்ய விடுங்கள். என்னுடைய நேர்மையை சந்தேகிக்க எனக்கு அக்னிப்பரிட்சை வைக்க வேண்டாம். அதை சீதையுடன் மட்டுமே வைத்துக்கொள்ளவும்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com