நிலவேம்பு குடிநீர்: கமல்ஹாசன் சற்றுமுன் அளித்த புதிய விளக்கம்
- IndiaGlitz, [Thursday,October 19 2017]
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நிலவேம்பு குடிநீர் அளிப்பதால் எந்த பக்கவிளைவும் இல்லை என்றும், நிலவேம்பு குடிநீர் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்வதாக தெரிவித்திருந்தார்.
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு தமிழக அமைச்சர்கள், சித்த மருத்துவர்கள் சங்கம் உள்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் கமல்ஹாசன் இதுகுறித்து சற்றுமுன்னர் விளக்கம் அளித்துள்ளார்.
நிலவேம்பு குடிநீரை தான் எதிர்க்கவில்லை என்றும், நிலவேம்பு குடிநீரை நம் நற்பணி இயக்கத்தினர் விநியோகிக்க வேண்டாம் என்றும் மட்டுமே தான் கூறியதாக விளக்கம் அளித்துள்ளார். மேலும் நிலவேம்புக்கு கமல் எதிர்ப்பு என்று செய்தி பரப்புவது எந்த விதத்திலும் நியாயமில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.