கோதாவில் இறங்கிவிட்டு பின்வாங்கலாமா? ரஜினிக்கு கமல் மறைமுக தாக்குதல்!
- IndiaGlitz, [Monday,February 18 2019]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும், தனது ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் கட்சிக்கு அவர்களுடைய விருப்பப்படி வாக்களிக்கலாம் என்றும் கூறியிருந்தார்.
இதுகுறித்து நேற்று கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன் கூறியபோது, 'கோதாவில் இறங்கிய பின் பின்வாங்கினால் மரியாதை இருக்காது என்றும், பின்னர் எதற்காக தொடைதட்டி இறங்க வேண்டும் என்றும் கூறினார். சாப்பாடு பரிமாறிய பின்னர் சாப்பிட முடியாது என்று கூறுவது நல்லதா? என்றும் அவர் ரஜினியை மறைமுகமாக தாக்கும் வகையில் கேள்வி எழுப்பினார். ரஜினியை கமல் நெருங்கிய நண்பர் என்று கூறிக்கொண்டாலும் கடந்த சில வருடங்களாகவே அவர் ரஜினியை மறைமுகமாக தாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்து வரும் ரஜினி ஆதரவு நெட்டிசன்கள், 'ரஜினிகாந்த் ஆரம்பத்திலேயே தனது குறிக்கோள் 2021ஆம் ஆண்டு வரும் சட்டசபை தேர்தல் தான் என்பதை விளக்கியுள்ளதாகவும், கோதாவில் ஆவேசமாக இறங்குவது புத்திசாலித்தனம் இல்லை என்றும் பொறுமை காத்து தக்க சமயத்தில் களமிறங்கி வெற்றியுடன் திரும்ப வேண்டும் என்றும் உணர்ச்சிவசப்பட்டு கோதாவில் இறங்கிய சிரஞ்சீவி, விஜயகாந்த் நிலைமை என்ன ஆச்சு? என்பதை கமல் சிந்திக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.